முகப்பு விலைப்பட்டியல் கருத்துகளை பதிவு செய்ய தொடர்புக்கு

புதிய நூல்கள்

மணிமேகலை விலைப்பட்டியல்
எழுத்தாளர், பதிப்பாளர் முதலீட்டுத் திட்டம்
புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள்

தகவலுக்கு

Name Email Phone Subject Comments

லேனா தமிழ்வாணன்

வாழ்க்கைக் குறிப்பு

திரு.தமிழ்வாணன்-திருமதி மணிமேகலை தம்பதியின் புதல்வர் இவர். தேவகோட்டையில் 1954இல் பிறந்தவர். திருமணமாகி இரு மகன்கள். மனைவி பெயர் ஜெயம். மூத்த மகன் அரசு அமெரிக்காவில் ஆ.ளு.படித்து முடித்துவிட்டு அங்கு பணிபுரிகிறார். அரசுவிற்குத் திருமணம் ஆகிவிட்டது. லேனாவிற்குத் தாத்தா எனும் பதவி உயர்வு 2007 அக்டோபரில் கிடைத்தது. பேத்தி மேகா என்கிற மணிமேகலை மற்றும் ஷிவானி அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இளையவர் ஆனந்த் எம்.பி.ஏ. முடித்துவிட்டு மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிகிறார்.

மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர்.

இவருடைய தலைமையில் செயல்படும் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவில் 84 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களின் துணையுடன் கடந்த 35 ஆண்டுகளாக ஆண்டு ஒன்றிற்குச் சராசரியாக 200 புத்தகங்கள் வீதம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் லேனா தமிழ்வாணன். இந்த ஆசிரியர் குழுவின் தலைவர் என்ற முறையில் இதுவரையில் 6500 புத்தகங்களுக்கு மேல் பதிப்பித்திருக்கிறார். 59 வயதில் இது ஒரு கின்னஸ் சாதனை. கடந்த 35 ஆண்டுகளில் இவர் பல்வேறு தலைப்புகளில் 70 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

தமிழகத்தின் சிறந்த பத்திரிகையாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜீவ் காந்தி விருதை 1992-1993இல் பெற்றிருக்கிறார்.

நன்கு உலகம் சுற்றியவர். தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று 1984- இல் பாரிசுக்கும், லண்டனுக்கும் விஜயம் செய்திருக்கிறார். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் துபாய்க்குச் சுற்றுப்பயணம் சென்று வந்திருக்கிறார். ஜப்பானுக்கும், ஆசியாவின் பல நாடுகளுக்கும் மே 1998- இல் மேற்கொண்டார். ஷார்ஜா தமிழ்ச் சங்கம் மே 1992-லும், உகாண்டா தமிழ்ச் சங்கம் 2012 லும் இவரை அழைத்துக் கௌரவித்தன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், இவர் 1986-இல் எழுதிய 'ஒரு பத்திரிகையாளனின் மேலைநாட்டுப் பயண அனுபவங்கள்' என்ற நூலை மிகச் சிறந்த பயண நூலாகத் தேர்ந்தெடுத்து, 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கியது. பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியும், சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரியும் இந் நூலைப் பாட நூலாக ஆக்கின.

இவரது வாழ்வு முன்னேற்ற நூலான 'ஒருபக்கக் கட்டுரை - பாகம் 12' சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பரிசைப் பெற்றது. பரிசுத் தொகை ரூ. 3,000 தமிழக நிதியமைச்சரால் வழங்கப்பட்டது. பூனாவில் உள்ள பாலாஜி இன்ஸ்டிடியூட் மிகப் பெரிய கல்வி நிறுவனத்தின் தாளாளர் திரு.பாலசுப்ரமணியன் என்பவர் தலைமை வாசகர்களுள் ஒருவர். இவர் லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகளை 16 இலட்ச ரூபாய்க்கு வாங்கி தம் இல்லத் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தி. தமிழ் எழுத்துலக வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததே இல்லை எனலாம்.

சென்னையில் உள்ள ஒருசில கல்லூரிகளில் இவர் இதழியல் வகுப்பு நடத்துகிறார். பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரி ஆகியவை மூலமாக இவர் ஏராளமான மாணவ மாணவிகளுக்கு இதழியல் கலையைப் பயிற்றுவிக்கிறார்.

வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருக்கும் இவர், மக்களுக்காக வாழ்வு முன்னேற்ற வகுப்புகளை நடத்திவருகிறார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இதற்கென இவர் 1991, 1992, 1995, 1998, 2006 மற்றும் 2007-இல் மலேசியாவுக்குச் சென்று வந்துள்ளார்.

இவருடைய படைப்புகளை நான்கு மாணவர்கள் ஆராய்ச்சி செய்து எம்ஃபில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். மூவர் பி.எச்.டி.. பட்டம் பெற்றுள்ளனர். மேலும் ஒருவர் பி.எச்.டி ஆய்வினை மேற்கொண்டுள்ளார். ஒருவர் எம்.பில் பட்டத்திற்காக ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

மாணவச் சமூகத்திற்கென முதல் முறையாக நேர நிர்வாகம் பற்றிய ஒலி நாடாவையும், ஒலித் தகட்டையும் வெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு.

தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களான டி.வி.எஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஹுண்டாய் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகிகளுக்கு நேர நிர்வாகப் பயிற்சி வகுப்பு நடத்துகிறார்.

சிட்னி தமிழ்ப் பண்பாட்டு மாநாடு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 1992-இல் நடந்தபோது, இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஐந்து பேர்களுள் இவரும் ஒருவர். நியூஸிலாந்தில் உள்ள வெலிங்டன் தமிழ்ச் சங்கமும் இவரை அழைத்துக் கௌரவித்திருக்கிறது.

இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கென நடத்தப்பட்ட பயிற்சிக் கருத்தரங்கிற்குத் தமிழகத்திலிருந்து இரு பத்திரிகையாளர்கள் இலங்கை அரசால் அழைக்கப்பட்டனர். இந்த இருவருள் லேனா தமிழ்வாணனும் ஒருவர்.

இவரது நாவல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

1996 ஜூலையில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களான தமிழ்நாடு பவுண்டேஷனும் தமிழ்நாடு பெடரேஷனும் இவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்துக் கௌரவித்தன. அமெரிக்கா செல்லும் வழியில் ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

1997 பிப்ரவரியில் ரோட்டரி கிளப் ஆப் பல்லவா சிறப்பு விருது ((For the sake of Honour Award) வழங்கிக் கௌரவித்தது.

1997 மார்ச் மாதம் முல்லைச்சரம் பத்திரிகை விழாவில் 'சாதனைச் செல்வர்' விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

1999இல் கோவையில் உள்ள மூவேந்தர் இலக்கியக் கழகம் இவருக்கு மூவேந்தர் விருதையும் இவரது தமிழைத் தேடி ஒரு பயணம் நூலிற்காக 10,000 ரூபாய் பரிசையும் வழங்கிச் சிறப்பித்தது.

2000 ஆவது ஆண்டின் நிறைவில் சுவிஸ் தமிழ் அன்பர் திரு. கல்லாறு சதீஷின் அழைப்பை ஏற்றுக் குடும்பத்துடன் சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகளுக்கும் மூன்றாவது முறையாக அமெரிக்காவிற்கும் சென்று திரும்பினார்.

2003 ஆம் ஆண்டு குவைத்தின் புகழ்மிக்க அமைப்பான பிரண்ட் லைனர்ஸ், இவரை அழைத்துக் கௌரவித்தது. இப் பயணத்தின்போது இசைஞானி இளையராஜாவுடன் பயணிக்கவும், நெருங்கிப் பழகவும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறார்.

மே,2003இல் என்.எஸ்.என்.ஏ என்ற அமெரிக்கச் சமூக அமைப்பின் அழைப்பை ஏற்று மீண்டும் அமெரிக்கா சென்றார். இச் சங்கத்தின் மாநாட்டில் தலைமை விருந்தினர் என்ற கௌரவத்தைப் பெற்றிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்ப்பதே கடினம். ஆனால் ரஜினியோ இவரை வீடு தேடி வந்து சந்தித்து, இவரது மகன் அரசுவின் திருமணத்தில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலையை விளக்கி, மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றார்.

தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஒலிம்பிக் கார்ட்ஸ் லிம்ட்டட் எனப்படும் அழைப்பிதழ்களின் தாயகத்தில் இவர் கடந்த பத்து ஆண்டுகளாக இயக்குநராக உள்ளார்.

இவரது வாழ்வு முன்னேற்ற நூலான ஒருபக்கக் கட்டுரைகள் - பாகம் 14, 1997ஆம் ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பாரத ஸ்டேட் வங்கியின் இரண்டாம் பரிசைப் பெற்றது. பரிசுத் தொகை ரூ.2,000.

அக்டோபர் 2004-இல் 'பாலம்' எனப்படும் ஒப்பற்ற சமூக அமைப்பு இவரைச் சிறந்த பத்திரிகையாளராகத் தேர்ந்தெடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதியாக விளங்கிய திரு.ரத்தினவேல் பாண்டியன் மூலம் தங்கப் பதக்கம் அணிவித்துக் கௌரவித்துள்ளது.

ஜுலை 2005 இல் கோலாலம்பூரில் நடந்த திருக்குறள் மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்ட பெருமையும் இவருக்கு உண்டு.

ஏப்ரல் 2007இல் குத்தாலத்தில் செயல்படும் ஸ்ரீ ஆதிசங்கரர் பேரவை இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டிப் பொற்கிழி அளித்துச் சிறப்பித்துள்ளது.

பிப்ரவரி 2008 தேனீ இலக்கியக் கழகம் இவருக்கு முனைவர் பூவண்ணன் விருது வழங்கி கௌரவித்தது. இவ்வமைப்பு ஒரு பக்கக் கட்டுரையை சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்து முதல் பரிசு வழங்கியுள்ளது.

விளையாட்டில் நாட்டமுள்ளவர். இந்த வயதிலும் தினமும் பாட்மின்டனும், சனி ஞாயிறுகளில் கிரிக்கெட்டும் ஆடும் பழக்கமுள்ளவர்.

சீனாவின் தொழில் நகரமான ஷாங்காயில் செயல்படும் சங்கமம் என்ற தமிழ் அமைப்பு இவரை 2010-இல் அழைத்துச் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கௌரவித்துள்ளது.

சென்னை புதுக் கல்லூரி மற்றும் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.

2010 மே மாதம்: இலக்கிய இதழான கவிதை உறவு, இவரது ஒரு பக்கக் கட்டுரைகள்-500 என்ற நூலைச் சிறந்த நூல் எனத் தேர்ந்தெடுத்து ரூபாய் 3000 வழங்கியது. இத்தொகையை எழுத்தாளர் மெர்வினின் நிதிக்கு அளித்தவர் லேனா.

திருச்செங்கோடு அருகே உள்ள விவேகானந்தா கல்விக் குழுமம் தமிழகத்திலேயே அதிகமான அளவில் பெண்கள் படிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் மட்டும் 20,000 பெண்கள் கல்வி பயிலுகின்றனர். இந்தக் கல்லூரியின் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினராகவும் லேனா பொறுப்பேற்றுள்ளார்.

நாமக்கல்லில் உள்ள கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை இவருடைய 500 ஒரு பக்கக் கட்டுரைகள் நூலை இந்த ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்து 2.10.2011 காந்தி ஜெயந்தி அன்று ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கியது.

இவருடைய ஆயிரம் ஒரு பக்கக் கட்டுரைகள் நூலின் மூவாயிரம் பிரதிகளை பூனாவைச் சேர்ந்த பேராசிரியர் கர்னல் திரு.பாலசுப்ரமணியம் வாங்கி மன்னார்குடி செங்கமலத்தாயார் அறக்கட்டளை மூலம் பல்வேறு கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் அன்பளிப்பாக வழங்கினார்.

திரு.லியோ முத்து கல்வி அறக்கட்டளை இவருடைய ஒரு பக்கக் கட்டுரைகள் நூல்களைப் பாராட்டி ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கியுள்ளது.

சென்னை தூர்தர்ஷன் (பொதிகை) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழ்த் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் லேனாவும் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2014 வரை இத்தேர்வுக் குழுவில் இவர் இருப்பார்.

அண்மையில் மணிவிழாக் கண்ட இம்மணிவிழா நாயகரின் எழுத்துலகச் சேவையைப் பாராட்டி மராட்டிய மாநில தமிழர் கூட்டமைப்பும், புனேவில் உள்ள ஸ்ரீபாலாஜி சொஸைட்டியும் இணைந்து 'மானுடச் சிந்தனை மாமேதைப் பட்டத்தினையும், ரூ.3 லட்சம் விருதினையும் இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளன.

அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இவரது தமிழ்ப் பணிகளைப் பாராட்டி முனைவர் பட்டம் அளித்து சிறப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.முகப்பு எங்களைப் பற்றி விலைப்பட்டியல் புதிய நூல்கள் நிகழ்ச்சிகள் கருத்துகளை பதிவு செய்ய தொடர்புக்கு

Copyright © www.manimekalaiprasuram.com     All Rights Reserved.

Web Design Chennai : Annaimar